இலங்கையில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த வண்ணமிருந்த சிறுவர் மந்தபோஷணை என்பது, நாடு மிக மோசமான சமூகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் மீண்டும் உயர்வடைய ஆரம்பித்தது. 2023 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, வறுமைக்கோட்டின் கீழ் வசிப்போரின் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்ந்ததுடன், மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வுகூரப்பட்டிருந்தது. இதன் பெறுபேறாக, மொத்த சனத்தொகையில் 17 சதவீதமானவர்கள் உணவுப் பாதுகாப்பின்றிய நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், மனித நேய உதவிக்கான தேவை கொண்டவர்களாக இருப்பதாகவும், 5 வயதுக்குட்பட்ட 31 சதவீதமான சிறுவர்கள் மந்த போஷாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போஷாக்கு என்பது அவர்களின் நலன், வளர்ச்சி மற்றும் விருத்தி போன்றவற்றில் நேரடியான மற்றும் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை கொண்டுள்ளது. இந்த நிலை தொடர்பில் சில சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்தியிருந்ததுடன், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின், சிறுவர்களிடையே உளசார் மற்றும் உடல்சார் விருத்தி தொடர்பான சிக்கல்களை தோற்றுவிக்கும் என தெரிவித்திருந்தன.

பாடசாலைக்கு சமூகமளிப்பு குறைந்து, அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் அடிப்படைக் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், போஷாக்கான ஆகார வேளையை சிறுவர்களுக்கு வழங்குவதனூடாக, அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தூண்டப்படுவதுடன், பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வியை அணுகுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஆரோக்கியமான மற்றும் முயற்சியுடைய எதிர்காலத் தலைமுறை என்பது தேசத்தின் சிறந்த சொத்தாகும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காளர் எனும் வகையில், டோக்கியோ சீமெந்து, எமது தேசத்தின் மோசமான சமூக பொருளாதார சவால்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பங்களிப்பை வழங்க முன்வந்திருந்தது. பொருளாதாரப் பின்னடவை கவனத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்கள் மத்தியில் போஷாக்கை மேம்படுத்துவதற்காக 'எதிர்காலத்துக்கு வளமூட்டல்' எனும் திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இந்தத் திட்டத்தினூடாக, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஒரு குவளை பால் மற்றும் போஷாக்கான மதிய ஆகார வேளை ஆகியவற்றை தினசரி, ஒரு கல்வி ஆண்டுக்காக வழங்க முன்வந்திருந்தது.

நிறுவனத்தின் ஸ்தாபக தவிசாளரான தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் சிந்தனைக்கமைய சில தசாப்த காலமாக நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மதிய உணவு வேளையை வழங்குவதற்கு நிதி வசதி வழங்கி, அதனூடாக பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு சமூகமளிப்பதை ஊக்குவித்திருந்தார். இதன் பின்னணியில், இந்தத் திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது. டோக்கியோ சீமெந்து குழுமத்திடமிருந்து பெருமளவு அர்ப்பணிப்பு இந்தத் திட்டத்துக்கு கிடைத்திருந்தது. குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களின் சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வியை தொடரவும், சிறு பராயத்தில் மந்தபோஷணையை இல்லாமல் செய்வதிலும் நீண்ட கால அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டில் எதிர்காலத்துக்கு வளமூட்டல் திட்டம், பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக இனங்காணப்பட்ட, மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பகுதியைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் ஆரம்பமாகியிருந்தது.

பின்னர், மொனராகலை செயற்திட்டத்தில் தம்பகல்ல பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றும் உள்வாங்கப்பட்டிருந்தது. 2023 ஜனவரி மாதத்தில் மற்றுமொரு மைல்கல் சாதனையை எய்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளின் மாணவர்களும் எதிர்காலத்துக்கு வளமூட்டல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர். அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஏற்கனவே ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக மதிய உணவு வேளைக்காக நிதி உதவி வழங்கப்படும் திருகோணமலையிலுள்ள பாடசாலை ஒன்றையும் டோக்கியோ சீமெந்து இந்தத் திட்டத்தில் உள்வாங்கியிருந்தது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இரு பாடசாலைகளும் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டின் நிறைவில், மொனராகலை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பின்தங்கிய பிரதேசங்களின் 11 பாடசாலைகளின் 1317 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், 'எதிர்காலத்துக்கு வளமூட்டல்' எனும் திட்டம் முக்கிய பங்காற்றிய வண்ணமிருந்தது.

இந்தத் திட்டத்தில் பாடசாலை சமூகத்துடன் தொடர்புடைய சகல பங்காளர் குழுக்களையும் உள்வாங்கியிருந்ததுடன், அதில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி அமைச்சின் அரச அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் அடங்கியிருந்தனர்.

சுகாதார அமைச்சு அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், தினசரி மதிய உணவு வேளையில் உள்ளடக்கப்பட வேண்டிய காய்கறிகள், புரதங்கள், தானியங்கள், பாலுணவுகள் மற்றும் பழங்கள் தொடர்பில் பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தீர்மானித்திருந்தார். வலய கல்விப் பணிப்பாளர்களுடன் இணைந்து, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் குழுக்களினால் இந்தத் திட்டம் மேற்பார்வை செய்யப்பட்டது. குறித்த பிரதேசத்திலிருந்து சகல உணவுப் பொருட்களும் பெறப்பட்டமையால், தொடர்ச்சித்தன்மை மற்றும் நிலைபேற்றுத்தன்மை போன்றன உறுதி செய்யப்பட்டிருந்தன. மேலும், இந்தத் திட்டத்தில் உணவு தயாரிப்புக்கான பொறுப்பை பெற்றோர்கள் முன்வந்து ஏற்றிருந்ததுடன், அதனூடாக சுய-தன்னிறைவுக்குட்பட்ட சமூகத் திட்டமாக இது மேம்பட்டு, பொருமளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. தூய முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தினால், அடிப்படை சமையல் சாதனங்கள் பாடசாலை சமையலறைக்கு வழங்கப்பட்டிருந்தன.

உணவு தயாரிக்கப்படும் வேளைகளில் அடிக்கடி அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, போஷாக்கான வகையிலும், சுகாதாரமான முறையிலும் அவை தயாரிக்கப்படுகின்றமையை கண்காணித்து உறுதி செய்யும் பணிகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொள்கின்றனர். தொடர்ச்சியாக பரிபூரண உணவு வேளைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்கும், சிறுவர்களின் வளர்ச்சி மைல்கற்கள் எய்தப்படுவதை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான முறையில், டோக்கியோ சீமெந்தினால், அறிக்கையிடல் பொறிமுறையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவும், திட்டத்தின் நிலைபேறாண்மைக்கு பங்களிப்பு வழங்குகின்றது.

எதிர்காலத்துக்கு வளமூட்டல் திட்டம் முன்னெடுக்கப்படும் பாடசாலைகளில், தினசரி சிறுவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதை காண்பது வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது. சகல பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அவதானிக்க முடிவதுடன், பெரும்பாலும் அதிகளவான சிறுவர்கள் தமது ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்வதையும், தூர நோக்குடைய இலக்கை எய்துவதையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.