திருகோணமலை கடற்பரப்பின் சதுப்பு நிலங்களில் இருந்த பெரும்பாலான கண்டல் தாவரங்கள் போர் காலகட்டத்தில் பாதுகாப்பு காரணமாக அகற்றப்பட்டன. எமது சதுப்பு நில கண்டல் தாவர மீள் வளர்ப்பு திட்டமானது திருகோணமலை விரிகுடா மற்றும் அதனைச்சுற்றியுள்ள அகற்றப்பட்ட சதுப்புநிலங்கள் புனரமைப்பதினை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கை கடற்படை மற்றும் சூழவுள்ள கிராமங்களிலுள்ள மீன்பிடி சமூகங்களுடன் இணைந்து திருகோணமலை வளாகத்தில் தனது சதுப்பு நில கண்டல் தாவர வளர்ப்புத் திட்டத்தினை தொடங்கியது. இத்;திட்டமானது பல்வேறு சாதகமான சூழலியல் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்கின்றது. உதாரணமாக, மீன்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்குதல், நண்டு, இறால் போன்ற கணுக்காலி வகையைச் சார்ந்த கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களின் வளமான வளர்ச்சிக்கான சூழலை ஏற்படுத்துதல், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களிடமிருந்து கடற்பிராந்தியங்களை பாதுகாப்பதுடன் கடலரிப்பினை தடுத்தல் போன்ற விடயங்களை குறிப்பிட முடியும். மேலும் சதுப்பு நிலங்கள் குறைவான அடர்த்தியுடன் காணப்படுகின்றமையால் தற்போதுள்ளவற்றை பாதுகாப்பது அவசியமாகும். எனவே நாம் திருகோணமலை கடற்பரப்பில் அவற்றை மீள் நடுகை செய்வதும், பராமரிப்பதனை ஊக்குவிப்பதும் அவசியமாகும் என்பதை நன்கறிவோம்.
எனவே, சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் திட்டமானது திருகோணமலை தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள எமது கண்டல் தாவர நாற்று மேடையினை அமைப்பதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் எமது நாற்று மேடையானது 10,000 சதுப்பு நில கண்டல் தாவரங்களை கொண்டிருப்பதுடன் அவற்றில் சில தாவரங்களை சாதாரண நிலைமைகளிலும் கூட பிறப்பாக்கம் செய்வது கடினமாகும். அத்துடன் இந்நாற்று மேடையில் எம் நாட்டிற்கே உரித்தான 07 வகையான கண்டல் தாவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும். மேலும் இவ்வனைத்து கண்டல் தாவர மீள் வளர்ப்பு திட்டச் செயற்பாடுகளும் துறை சார்ந்த பாதுகாப்பு நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் மற்றும் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் இயற்கை தாவர கட்டமைப்பு விதிகளை பின்பற்றியும் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டக்காலப்பகுதியில் எம்மால் திட்டத்தின் ஆரம்பத்தில் நாட்டப்பட்ட தாவரங்களிலிருந்து இயற்கையாக கிடைக்கப்பெற்ற விதைகளைக் கொண்டு அழிக்கப்பட்ட சதுப்புநிலக்காடுகளை 4-5 வருடங்களுக்குள் மீண்டும் உருவாக்க முடிந்தது. இக்கண்டல் தாவர மீள் வளர்ப்பு திட்டம் ஆரம்பத்தில் எமது கிழக்கு தொழிற்சாலைக்கு அருகிலுள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை துறைமுகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து எமது தொழிற்சாலையைச் சுற்றியுள்ள கடலோரப்பகுதியில் 17,000 சதுப்பு நில கண்டல் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. எமது சதுப்புநில பாதுகாப்பு திட்டத்தில் இதுவொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்பதுடன் இலங்கை கடற்படையின் உதவியுடன் திருகோணமலை மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில் 60,000 இற்கும் மேற்பட்ட சதுப்பு நில கண்டல் தாவரங்களை நாம் நடுகை செய்துள்ளோம். இதனூடாக இப்பிரதேச சதுப்பு நிலங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதுடன் இத்திட்டத்தின் தொடர் வெற்றி ஆண்டுக்கு 10,000 புதிய கண்டல் தாவரங்களை உருவாக்குவதுடன் அவை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புக்களில் எமது கடற்படையினரால் மீள் நடுகை செய்யப்படுகின்றன.
சதுப்புநிலங்கள் அதிகளவிலான அவதானிப்பு மற்றும் ஆய்வுகளுக்கான சூழல் அமைப்பினை கொண்டுள்ளதுடன் அவை நில அமைப்புக்களை உருவாக்குவதற்கான காரணியாகவும், கடலரிப்பினை தடுப்பதற்கு முக்கிய பங்கினையும் வகிக்கின்றன. அத்துடன் அதன் தனித்துவமான அமைப்பு மில்லியன் கணக்கான இளம் மீன் வகைகளின் வளர்ச்சிக்கான காரணியாகவும், சில ஊர்வன வகைகள், ஈருடக வாழிகள் (நீர் நில வாழ்வன) மற்றும் பாலூட்டி வகைகளின் வாழ்விடமாகவும் உள்ளன. அத்துடன் பல்வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கான கூடுகள் போன்றவற்றிற்கு பொருத்தமான அமைப்பினைக்; கொண்டுள்ளன. மேலும் கடலோரச் சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான மீன்வளம் மற்றும் சுற்றுலா சார்ந்த வணிக செயற்பாடுகளுக்கு சதுப்பு நிலச் சூழலினை சார்ந்துள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காக கடற்கரை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் இச்சுற்றுச்சூழல் அமைப்புக்கள் அருகி வருவதற்கான காரணியாகளாக அறியப்பட்டுள்ளன. இப்பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கையின் பாதகமான மாற்றங்களை குறைத்துக்கொள்ளும் பொருட்டு இச்சிக்கலான உயிர்பல்வகைமைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை முகாமைத்துவப்படுத்தி பாதுகாப்பது அவசியமாகும்.
திருகோணமலை துறைமுக கடற்பரப்பில் உள்ள சதுப்பு நிலங்களை விஞ்ஞான ரீதியாக மீள் உருவாக்கும் எமது முயற்சியானது தற்போது பல்வகை கண்டல் தாவரங்களுடன் கொண்டமைந்த எமது சுற்றுப்புறத்தினை விலைமதிப்பற்ற இயற்கையின் சொத்தாக மாற்றியுள்ளது.
தற்போது இப்பிரதேசமானது மனிதனால், முக்கியமாக இயற்கை மீது அக்கறை கொண்ட ஓர் பெருநிறுவன மனிதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க மாற்றத்தினை முன்மொழியும் மாதிரியாக விளங்குகின்றது. மேலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்பினை நேரடியாக ஆய்வு செய்யும் வாய்ப்பினையும் வழங்குகின்றது.
- எமது தொழிற்சாலை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள எமது சதுப்பு நில கண்டல் தாவர வளர்ப்புத் திட்டத்தில் எம் நாட்டிற்கே உரித்தான 07 வகையான கண்டல் தாவரங்களுடன் 10,000 தாவரங்களும் வளர்க்கப்பட்டுள்ளன.
- இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இலங்கை கடற்படையினருடன் இணைந்து திருகோணமலை கடற்பரப்பில் 60,000 சதுப்பு நில கண்டல் தாவரங்களை நட்டுள்ளோம்.
- அனைத்து மீள் நடுகையின் போதும் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் இயற்கை தாவர கட்டமைப்பு விதிகளை நாம் பின்பற்றுகின்றோம்.
- எமது தொழிற்சாலையைச் சுற்றியுள்ள கடலோரப்பகுதியில் நடப்பட்டுள்ள 17,000 சதுப்பு நில கண்டல் தாவரங்கள் தற்போது செழிப்பான சதுப்பு நில வாழ்விடமாக மாறியுள்ளது.