டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலை போஷாக்குத்திட்டம் விஸ்தரிப்பு

டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலை போஷாக்குத்திட்டம் விஸ்தரிப்பு

மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் 179 மாணவர்களை உள்வாங்கி தனது “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலைப் போஷாக்குத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் விஸ்தரித்திருந்தது. இந்தத் திட்டத்தில் கொட்டியாகல, வத்தேகம ஸ்ரீமல் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள், சியம்பலாண்டுவ பம்பரகஸ்ரொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் பரவாய ஆரம்ப பாடசாலை மற்றும் கந்தஉடபங்குவ தனகிரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் அடங்கியுள்ளனர். இவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் சமபல மதிய உணவு வேளை வழங்கப்படுகின்றது.

பல வருட காலமாக அமைதியான முறையில் இந்த சமூக மேம்பாட்டுத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து முன்னெடுத்திருந்ததுடன், இதனூடாக திருகோணமலை, திரியாய மகா வித்தியாலயத்தின் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு மதிய உணவு வேளைகள் வழங்கப்படுகின்றன. மொனராகலை மாவட்ட பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” மதிய உணவு வேளைத் திட்டத்தில் தற்போது 475 க்கும் அதிகமான பின்தங்கிய நிலையிலுள்ள பாடசாலை மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புத்தாக்கங்களுக்கான பணிப்பாளர் பிரவீன் ஞானம் இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டில் அதிகரித்துக் காணப்படும் சிறுவர் மந்தபோஷாக்கு தொடர்பான பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. பெரிதும் கவனம் செலுத்தப்படாத மந்த போஷணை என்பது, எதிர்காலத் தலைமுறையினர் மத்தியில் உள மற்றும் உடல்சார் குறைகளை தோற்றுவிக்கக்கூடியது என்பதுடன், தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியுமாக இருந்தால் மாத்திரமே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பதும் சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்திருக்கும் நிலையில், இந்த வசதியை ஏற்படுத்த நாம் தீர்மானித்தோம்.” என்றார்.

மொனராகலையைச் சேர்ந்த 4 பாடசாலைகளின் 179 மாணவர்கள், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” பாடசாலை போஷாக்குத் திட்டத்தினூடாக மதிய உணவு வேளையைப் பெறுகின்றனர்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் தினசரி உணவுத் திட்டம் அமைந்திருப்பதுடன், சகல பிரதான உணவு வகைகளிலும் பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பசுப் பாலுணவு மற்றும் உள்நாட்டில் பெறப்பட்ட பழ வகை போன்றன அடங்கியிருக்கும். இவற்றினூடாக பிள்ளைகளின் போஷாக்கு விருத்திக்கான தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது. தொடர்ச்சியாக சிறுவர்கள் பரிபூரண உணவு வேளையை பெற்றுக் கொள்வதை தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையிலும், சிறுவர்களின் வளர்ச்சி இலக்குகள் முன்னேற்றகரமாக எய்தப்படுவதை உறுதி செய்வதற்கும் டோக்கியோ சீமெந்தினால், பாடசாலை நிர்வாகம், பெற்றோர் குழுக்கள், கல்வி அமைச்சின் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் சுகாதார அதிகாரிகளின் பங்கேற்புடனான கண்காணிப்புப் பொறிமுறையும் நிறுவப்பட்டுள்ளது.



சிறுவர்களின் போஷாக்கு வளர்ச்சி தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தினசரி உணவு வேளையில் அடங்கியிருக்கும் பிரதான உணவுக்கூறுகள்

டோக்கியோ சீமெந்து மற்றும் பாடசாலை நிர்வாகத்துக்குமிடையே ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் முக்கிய பங்காற்றியிருந்தார். பாடசாலை மட்டத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உணவு தயாரிப்பில் தன்னார்வ அடிப்படையில் பெற்றோர்கள் முன்வந்து பங்களிப்பு வழங்குகின்றனர். இந்த உணவு வகைகளை தயாரிப்பதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக் கொடுக்கவும், பாடசாலை சமையலறைகளை தூய்மையாக பேணுவதற்கு அவசியமான பொருட்களை வழங்கவும் டோக்கியோ சீமெந்து முன்வந்திருந்தது. இந்தத் திட்டத்தை கண்காணிப்பதற்காக இந்தப் பிரதேசங்களின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அடிக்கடி விஜயம் செய்து, சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் உணவுகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்கின்றனர்.



பாடசாலை மட்டத்தில் தன்னார்வ பெற்றோர்களினால் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் உணவு தயாரிக்கப்படுவதையும், சுகாதார அதிகாரிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதையும் காணலாம்

இந்தத் திட்டம் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஸ்தாபகத் தவிசாளர் தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு வேளையை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இவர் உணர்ந்திருந்தார். அத்துடன், அதனைப் பெற்றுக் கொடுப்பதனூடாக, பாடசாலைக்கான பிள்ளைகளை வருகையை ஊக்குவிக்க முடியும் என்பதுடன், ஆரம்பக் கல்வியை இவர்கள் பூர்த்தி செய்வதற்கு அவசியமான தூண்டுதலாகவும் இது அமைந்திருந்தது. நாட்டில் உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களின் சிறுவர்கள் மத்தியில் மந்த போஷாக்கு மற்றும் வளர்ச்சிப் பாதிப்பு தொடர்பில் சர்வதேச முகவர் அமைப்புகளான UNICEF மற்றும் WB போன்றன எதிர்வுகூரியிருந்த நிலையில், இந்த உணவு வேளைத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய டோக்கியோ சீமெந்து குழுமம் தீர்மானித்திருந்தது. “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” திட்டத்தினூடாக இந்தச் சிறுவர்களின் பெற்றோருக்கு தினசரி தமது பிள்ளைகளுக்கு போதியளவு உணவை வழங்குவதில் காணப்படும் பாரிய சுமைகளில் ஒன்று நிவர்த்திக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக வலுவூட்டல் திட்டங்களில் ஒன்றாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், நாட்டு மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதுபோன்ற திட்டங்களினூடாக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றினூடாக தமது சமூக நலன்புரி மற்றும் சூழல்பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட்டாண்மைச் செயற்பாடுகளில் வெற்றிகரமாக உள்வாங்கியுள்ளதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணிப் பங்காளராகத் திகழும் நோக்கத்துக்கமைய செயலாற்றிய வண்ணமுள்ளது.