நிர்மாணத்துறையின் தேசிய திறனை கட்டியெழுப்ப டோக்கியோ சீமெந்து – NAITA கைகோர்ப்பு

நிர்மாணத்துறையின் தேசிய திறனை கட்டியெழுப்ப டோக்கியோ சீமெந்து – NAITA கைகோர்ப்பு

டோக்கியோ சீமெந்து மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) ஆகியன உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. நிர்மாணத்துறைக்கு அவசியமான நிபுணத்துவம் வாய்ந்தவர்களை கட்டியெழுப்பும் வகையில் அவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி தகைமையை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், தம்புளையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தினூடாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் வழிகாட்டலில், டோக்கியோ சீமெந்தினால் மேசன்மாரன் திறனை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அலஹப்பெரும மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி லங்கா பிஎல்சியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால் பிசி ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். இந்நிகழ்வு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் NAITA வின் பதில் மற்றும் உதவி பணிப்பாளர்கள் கலந்து கொண்டதுடன், டோக்கியோ சீமெந்து குழுமம் சார்பாக பணிப்பாளரும் ஆலோசகருமான கிறிஸ்டோபர் பெர்னான்டோ, ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் எம்.ஜி.எம்.யு. இஸ்மைல், ஆலோசனை பொறியியலாளர் மௌலி குணரத்ன, டோக்கியோ சுப்பர்மிக்ஸ் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜனக பெரேரா மற்றும் குழுமத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தசந்த உடவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மாவட்ட மட்டத்தில் NAITA ஈடுபாட்டை கொண்டுள்ளதுடன், இளைஞர்களுக்கும் நிபுணர்களுக்கும் பயற்சி வாய்ப்புகளை வழங்கி, தொழில் நிலை தகைமையை பெற்றுக் கொள்ள உதவிகளை வழங்குகிறது. 1997 ஆம் ஆண்டு முதல் நாட்டின் நிர்மாணத்துறைக்கு பெருமளவான பங்களிப்பை டோக்கியோ சீமெந்து குழுமம் வழங்கி வருகிறது. இதில் மேசன்மாருக்கான பயிற்சிகளும் அடங்கியுள்ளன. மேலும், 2012 இல் தம்புளையில் டோக்கியோ சீமெந்து கம்பனியின் ஸ்தாபக தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் நினைவாக நவீன வசதிகள் படைத்த பயிற்சி நிலையமொன்றும் நிறுவப்பட்டிருந்தது. இதனூடாக பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்களுக்கு மேசன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஏ.வை.எஸ். ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்திற்கு மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கிகாரமும் கிடைத்துள்ளது. 50 வதிவிட பயிற்சியாளர்களை கொண்டிருக்கும் வசதிகளை கொண்டுள்ளதுடன், சகல வசதிகளைக் கொண்ட கேட்போர் கூடத்தையும் பிரயோக பயிற்சி வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பரிபூரண பயிற்சி அமர்வுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சகல கட்டிட சாதனங்களையும் மூலப்பொருட்களையும் தன்வசம் கொண்டுள்ளது. வருடாந்தம் சுமார் 200 மேசன்மார் இங்கு நிபுணத்துவ தகைமைகளை பெற்றுக் கொள்வதுடன், அதனைத் தொடர்ந்து தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பங்கேற்கின்றனர். சிலர் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்று, நாட்டுக்கு பெறுமதி வாய்ந்த அந்நியச் செலாவணியை பெற்றுக் கொடுக்கின்றனர்.

இரு நிறுவனங்களும் பல ஆண்டு காலமாக நெருக்கமாக பணியாற்றி வந்துள்ளதுடன், நிர்மாணத்துறையில் நிபுணத்துவ பயிற்சிகளை வழங்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த புதிய உடன்படிக்கையினூடாக, முன்னெடுக்கப்படும் பயிற்சி நெறியின் தாக்கம் மேம்படுத்தப்படும் என்பதுடன், NAITA மாவட்ட அலுவலக வலையமைப்பினூடாக நாட்டின் அனைத்து பாகங்களையும் சென்றடையும்.

ஏ.வை.எஸ். ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தின் சகல பயிற்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளின் காரணகர்த்தாவாக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஆலோசனை பொறியியலாளரான மௌலி குணரத்ன செயலாற்றுகிறார். இந்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்காக NAITAஇன் பணிப்பாளர் நாயகம் ஜே.சி.கே. பஸ்நாயக்க உடன் நெருக்கமாக செயலாற்றியிருந்தார். இதனூடாக உள்நாட்டு மேசன்மாருக்கு தமது நிபுணத்துவத்தை மேம்படுத்தி, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட NVQ சான்றிதழை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

NAITA தலைவர் கலாநிதி. சாரங்க அலஹப்பெருமகருத்துத் தெரிவிக்கையில், ‘தனியார்-பொது பங்காண்மைகள் என்பது மிகவும் முக்கியமானது. இதனூடாக அரசாங்கத்துக்கு வலுவூட்டப்படுகிறது. பங்காண்மைகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் NAITA கவனமாக செயலாற்றுவதுடன், அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் தொடர்ச்சியாக தனது கீர்த்தி நாமத்தை பேணுவதுடன், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகைமை வாய்ந்த நிபுணர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த பங்காண்மையில் நான் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளேன். இலங்கையின் மாபெரும் மற்றும் ஒரே முழுமையான உரிமையாண்மையை கொண்ட சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், இரு நிறுவனங்களின் வலிமைகளை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தும் என்பதுடன், டோக்கியோ சீமெந்தின் பயிற்சி நிலையத்தினூடாக உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வாய்ப்புகளை வழங்கும், இது NAITA இன் அர்ப்பணிப்பு மற்றும் நற்பெயருக்கு மேலும் வலுச் சேர்க்கும்’ என்றார்.

மேசன்மாரை கட்டியெழுப்புவதற்கு மேலாக, நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு தமது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் டோக்க்pயோ சீமெந்து முன்னெடுக்கிறது. இந்த கருத்தரங்குகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், நிர்மாணத்துறையில் பின்பற்றப்படும் சிறந்த செயன்முறைகளை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளதுடன், சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சீமெந்து அடிப்படையிலான பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் தொடர்பான புத்தாக்கமான முறைகள் தொடர்பான நிபுணத்துவ அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

இலங்கையின் நிர்மாணத்துறையில் நம்பிக்கையை வென்ற உயர் தரம் வாய்ந்த சீமெந்து மற்றும் கொங்கிறீற் கலவை விநியோகத்தருக்கான நற்பெயரை டோக்கியோ சீமெந்து கொண்டுள்ளது. இலங்கையின் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கும் செயற்திட்டங்களுக்கு உயர் தரம் வாய்ந்த பொருட்களை வழங்குவதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் பங்காளர் எனும் தனது உயர் நாமத்தையும் கட்டியெழுப்பியுள்ளது. சீமெந்து மற்றும் கொங்கிறீற் ஆகியவற்றின் இலங்கையின் 1ல் தர விநியோகத்தர் எனும் வகையில், தனது ஊழியர்களை முறையாக பயிற்றுவித்து, தயார்ப்படுத்தி வருவதுடன், உள்நாட்டு நிர்மாணத்துறையைச் சேர்ந்தவர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.