திருகோணமலையில் கடலினுள் அருங்காட்சியகம் அமைப்பதற்கு கடற்படையினருக்கு டோக்கியோ சீமெந்து உதவி

திருகோணமலையில் கடலினுள் அருங்காட்சியகம் அமைப்பதற்கு கடற்படையினருக்கு டோக்கியோ சீமெந்து உதவி

இலங்கையின் சுற்றுலாப் பிரயாணப் பகுதிகளில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கையின் கடலினுள் அமைக்கப்பட்ட இரண்டாவது அருங்காட்சியகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இலங்கை கடற்படையின் முன்னாள் கட்டளைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். திருகோணமலையில் சான்டி குடா பகுதியில் ஒப்பற்ற நீச்சல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமம் இந்த அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு உதவிகளை வழங்கியிருந்தது. காலியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கடல்வாழ் உயிரின காப்பகத்தைத் தொடர்ந்து, நிறுவப்பட்டுள்ள இரண்டாவது கடல்கீழ் அருங்காட்சியகமாக இது அமைந்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் ஈடுபாடுடைய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இந்த கடல்கீழ் அருங்காட்சியகம் என்பது மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாக அமைந்துள்ளது. திருகோணமலை குடா பகுதியைச் சேர்ந்த சகல பவளப்பாறை வம்சங்களின் இருப்பிடமாக இந்த கடல்பூங்கா அமைந்திருக்கும்.

பவளப்பாறைகளின் காரணமாக, இளம் மீன்கள் கவரப்படுவதுடன், அவற்றினூடாக மீன் சமூகங்கள் உருவாக்கப்படும். இந்த கடல்நீர் பூங்காவை அமைப்பதற்கான பிரதான நோக்கம், பவளப்பாறைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இயற்கையான கடல்வாழிடப்பகுதியில் சஞ்சரித்து, அவற்றை தமது இருப்பிடமாக்கிக் கொண்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழிலுக்கு பயனளிப்பதாக அமைந்திருப்பதாகும்.



இந்த அருங்காட்சியகப்பகுதியில் கடற்படையினரால் வடிவமைக்கப்பட்ட சீமெந்து கட்டமைப்புகள் காணப்படுகின்றன. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் டோக்கியோ சுப்பர் பிளென்ட் ஹைட்ரோலிக் சீமெந்து இந்த கட்டமைப்புகளை நிறுவுவதற்கு விநியோகிக்கப்பட்டிருந்தன. சதுப்பு நிலங்கள் அல்லது கடல்நீர்சார் பகுதிகளில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த சீமெந்து மிகவும் உகந்ததாக அமைந்துள்ளது. விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த சீமெந்தினால், சல்பேட் மற்றும் குளோரின் போன்றவற்றிலிருந்து கட்டமைப்பு பாதுகாக்கப்படுவதுடன், அவை நீண்ட காலம் நிலைத்திருப்பதும் உறுதி செய்யப்படுகின்றது. மேலும், டோக்கியோ சுப்பர் பிளென்ட் ஹைட்ரோலிக் சீமெந்துக்கு GREEN® Label சான்றும் வழங்கப்பட்டுள்ளது. சாம்பலை மீள்சுழற்சிக்குட்படுத்தி பிளென்ட் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள சூழலுக்கு நட்பான சீமெந்து வகையாக இது அமைந்துள்ளது. இதன் காரணமாக, கடல் நீர் மாசுப்படுத்தப்படுவதில்லை. பவளப்பாறைகளுக்கும் இதர கடல் வாழ் உயிரினங்களுக்கும் உயிர் வாழ்வதற்கு பொருத்தமான பாதுகாப்பான வாழிடப்பகுதி உருவாக்கப்படுகின்றது.



டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பவளப்பாறை புனருத்தாரணத் திட்டத்தின் நீண்ட காலப் பங்காளர்களாக இலங்கை கடற்படை திகழ்கின்றது. பவளைப்பாறைகளை மீள நிறுவுவது மற்றும் மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட கொங்கிறீற் கொண்டு தயாரிக்கப்பட்ட படிப்பாறைகளை காலி, திருகோணமலை, பாசிக்குடா, காயங்கேணி, டச்சு குடா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கரையோரப் பகுதிகளில் நிறுவுவதில் இவர்கள் கைகோர்த்து செயலாற்றியிருந்தனர். இந்த கைகோர்ப்பினூடாக, டோக்கியோ சீமெந்தின் பவளப் பாறைகள் பாதுகாப்புத் திட்டத்தினூடாக கடற்படையினருக்கு பவளைப்பாறைகளை மீள நிறுவுவதற்கு அவசியமான வளர்ப்பிடங்களை நிறுவிக் கொள்ள முடிந்தது.



பவளைப் பாறைகள் பாதுகாப்பு திட்டத்துக்கான டோக்கியோ சீமெந்தின் ஈடுபாட்டின் மற்றுமொரு அங்கமாக, திருகோணமலையின் சன்டி குடா பகுதியில் கடல்கீழ் அருங்காட்சியகத்தை நிறுவுவதில் கடற்படையினருக்கு உதவிகளை வழங்கியிருந்தமை அமைந்துள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில் கைகோர்த்துள்ளமையையிட்டு டோக்கியோ சீமெந்து மிகவும் பெருமை கொள்கின்றது. உள்நாட்டவர்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் கவர்ந்த பகுதியாக இது அமைந்திருக்கும் என்பதுடன், சுற்றுலாத்துறைக்கு பெறுமதி சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

பவளைப் பாறைகள் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு மேலாக, டோக்கியோ சீமெந்தினால் கண்டல் தாவரங்கள் வளர்ப்பு திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை கடற்படையுடன் கைகோர்த்து இந்தத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து கிழக்குக் கரையோரப் பகுதியில் முன்னெடுக்கின்றது. இது போன்ற சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை தனது கூட்டாண்மை பெறுமதிகளில் உள்வாங்கி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளராகத் திகழ்வது எனும் தனது நோக்கத்துக்கமைய செயலாற்றி வருகின்றது.