இசை ஊடாக சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டும் இலாப நோக்கற்ற செயற்திட்டமான The Music Project உடன் டோக்கியோ சீமெந்து கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பாடசாலைகள் மற்றும் குருநாகல், மாவத்தகமயைச் சேர்ந்த பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு தமது இசைக் கல்வியை மேம்படுத்திக்கொள்ள டோக்கியோ சீமெந்து அனுசரணை வழங்கும். முல்லைத்தீவின் யோகபுரம் மகாவித்தியாலயம், தேரன்கண்டல் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் 140 மாணவர்கள் மற்றும் குருநாகலின் குணாநந்த மகாவித்தியாலயத்தின் 50 மாணவர்கள் ஆகியோர் இந்த ஒன்றிணைவினூடாக 2017 முழுவதும் பயன்பெறவுள்ளனர்.
இந்த அனுசரணை வழங்கும் பங்காண்மை தொடர்பான நிகழ்வில் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “The Music Project என்பது இசை பயில ஆர்வமாக உள்ள சிறுவர்களை இணைப்பதன் ஊடாக சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்க்கின்றனர். இசையில் மட்டுமின்றி, இந்த திட்டத்தினூடாக ஏனையவர்களுக்கு மதிப்பளிப்பதனூடாக சிறந்த பெறுமதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது. இந்த செயற்திட்டத்தில் நாம் கைகோர்ப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த சிறுவர்கள் சிறந்த நிலைக்கு உயர்வார்கள் என நாம் நம்புகிறோம்’ என்றார்.
தற்போது ஐந்தாவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் The Music Project என்பது நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த பின்தங்கிய நிலையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இசையை பயில்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த மாணவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், முல்லைத்தீவு மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் வதிவிட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்த இரு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வடக்கு மற்றும் தென் பிராந்தியங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் இணைந்து இசையை பயில்வதற்கும் இசையமைப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.
முல்லைத்தீவு, மல்லாவி தேரன்கண்டல் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னதாக இசைப்பயிற்சிகளை பெறுகின்றனர். இந்த பயிற்சிகளின் போது, புல்லாங்குழல், வயலின், செல்லோ, ட்ரம்பட், க்ளரினெட் மற்றும் பல இசைக்கருவிகளை பயன்படுத்துவது பற்றிய விளக்கங்கள் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து இந்த இசைக்கருவிகளை இயக்குவது பற்றி பயிலும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
The Music Project ன் காப்பாளர் திருமதி. ஷலினி விக்ரமசூரிய கருத்துத் தெரிவிக்கையில், ‘வெனிசுலாவின் El Sisitema வை அடிப்படையாகக் கொண்ட “The Music Project” என்பது இசையை வித்தியாசமான கற்பித்தல் முறையினூடாக பயில வழிவகுக்கிறது. இசைக்கருவிகளை பயில்வது என்பது ஒன்றிணைவு, ஆக்கத்திறன், வினைத்திறனின் உணர்வு மற்றும் அவற்றினூடாக நம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை வழங்குகின்றது என நாம் கருதுகிறோம். இணைக்கும் மொழி என்பது இன்மையால், இசை என்பது அந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதாக நாம் கருதுகிறோம். வடக்கு மற்றும் தெற்கில் இந்த நிகழ்ச்சி இரு இடங்களில் முன்னெடுக்கப்படுகிறது. உலக இசைச் சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் வகிப்பதாக உள்நாட்டு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவர்கள் உணர்வார்கள்.’ என்றார்.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆர்வலர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன. டோக்கியோ சீமெந்து கம்பனி இந்த ஆண்டில் அனுசரணையாளராக இணைந்துள்ளது. நாளைய தலைவர்களுக்கான உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்துவது எனும் நிறுவனத்தின் நம்பிக்கையின் பிரகாரம், புதிய சாதனங்களை பயன்படுத்தி உலகை வெல்ல வாய்ப்பை வழங்க டோக்கியோ சீமெந்து முன்வந்துள்ளது.
சமூக நலன் மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை தனது நிறுவனத்தின் உள்ளக அங்கமாக கொண்டுள்ள டோக்கியோ சீமெந்து நிறுவனம், நாட்டை வளமூட்டும் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது. இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயற்பாடுகளில் டோக்கியோ சீமெந்து பாடசாலைகளுக்கிடையிலான Super Quiz, தம்புளையில் அமைந்துள்ள ஏவைஎஸ் ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகம் மற்றும் Foundation of Goodness அமைப்புடனான பங்காண்மை ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. மேலும், பவளப்பாறைகள் மறுசீரமைப்பு மற்றும் கண்டல் காடுகளை வளர்த்தல் போன்றவற்றை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
படம்:
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், அனுசரணைக்கான பங்களிப்பை The Music Project ன் காப்பாளர் திருமதி. ஷலினி விக்ரமசூரியவிடம் கையளிப்பதை காணலாம்.