யாழ்ப்பாணத்தில் கடற்படை முன்னெடுக்கும் கண்டல்காடு பாதுகாப்பு திட்டத்துடன் டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்படை முன்னெடுக்கும் கண்டல்காடு பாதுகாப்பு திட்டத்துடன் டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், இலங்கை கடற்படையின் வடபிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர், பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற கண்டல்காடு தாவர நடுகை நிகழ்வில் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண குடாநாட்டு பகுதியில் 5000 கண்டல்காடு மரங்களை நாட்டும் திட்டத்தை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் மேற்பார்வையின் கீழ், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் கண்டல்காடு கன்றுகளை நாட்டுவதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனூடாக, நாட்டின் கரையோர மற்றும் கடல்சூழலை பேணுவதற்கான தமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக டோக்கியோ சீமெந்து குழுமம் 3500 கண்டல்காடு தாவரக் கன்றுகளை அன்பளிப்புச் செய்து, இந்தத் திட்டத்தில் கைகோர்த்திருந்தது. திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கண்டல்காடு கன்று வளர்ப்பகத்திலிருந்து இந்தக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. திருகோணமலை டோக்கியோ சீமெந்து கண்டல்காடு தாவரக் கன்று வளர்ப்பகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலமாக கண்டல்காடு தாவரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கடல் உயிரின பாதுகாப்பு தொடர்பில் நீண்ட காலமாக தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடையாளமாக, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.மஹேசன் ஆகியோர் இந்த கண்டல்காடு தாவரங்கள் நடும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வை வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வு, காரைநகருக்கான நுழைவாயிலாக அமைந்திருக்கும் பொன்னாலை பகுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாண கரையோர சமூகங்களின் பிரதான பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு சூழல் பாதுகாப்புத் திட்டங்களில் நீண்ட காலமாக கைகோர்த்துள்ள பங்காளராக இலங்கை கடற்படை திகழ்கின்றது. டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பவளப் பாறைகள் பாதுகாப்பு மற்றும் கண்டல்காடு வளர்ப்பு திட்டங்களில் அவர்களின் தீவிர ஈடுபாட்டினூடாக, இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடிந்திருந்தது. திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கண்டல்காடு தாவரக் கன்று வளர்ப்பகத்திலிருந்து வழங்கப்பட்ட 20,000 க்கும் அதிகமான கண்டல்காடு தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் இதுவரையில் இலங்கை கடற்படை பயிரிட்டுள்ளது. யாழ்ப்பாண குடா பகுதியில் இந்த இயற்கை கண்டல்காடு செய்கையை மேற்கொள்ளும் இலங்கை கடற்படையின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பது என்பதனூடாக, நாடு, நாட்டு மக்கள் மற்றும் சூழல் ஆகியவற்றை வளமூட்டிப் பேணும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.