கொழும்பு துறைமுக மொத்த டேர்மினல் கொள்ளளவு விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து ரூ. 2.5 பில்லியன் முதலீடு

கொழும்பு துறைமுக மொத்த டேர்மினல் கொள்ளளவு விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து ரூ. 2.5 பில்லியன் முதலீடு

டோக்கியோ சீமெந்து கொழும்பு துறைமுக டேர்மினலின் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கொள்ளளவு பகுதியின் செயற்பாடுகளை ஆரம்ப வைபவ நிகழ்வுடன் அண்மையில் ஆரம்பித்திருந்தது. சீமெந்து ஜாம்பவானின் 2.5 பில்லியன் ரூபாய் முதலீட்டில் இந்தத் திட்டம் நிறுவப்பட்டிருந்தது. இந்தப் பிரிவை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோர் திறந்து வைத்தனர். முற்றிலும் இலங்கையின் நிறுவனம் எனும் வகையில் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த விரிவாக்க நடவடிக்கை அமைந்துள்ளது.   முழுமையாக இயங்க ஆரம்பித்ததும், கொழும்பு துறைமுகத்தினுள் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து டேர்மினல் ஊடாக வருடாந்தம் 450,000 மெட்ரிக் டொன்கள் எடையுடைய சீமெந்தை கையாளக்கூடியதாக இருக்கும். புதிதாக நிறுவப்பட்ட களஞ்சியசாலை மற்றும் விநியோக கொள்ளளவு விரிவாக்கத் திட்டத்தினூடாக டோக்கியோ சீமெந்தினால் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தடங்கலில்லாத சீமெந்து விநியோகத்துக்கான உறுதியளிப்பு வழங்கப்படும்.   தலா 6000 மெட்ரிக் டொன்கள் கொள்ளளவுடைய மூன்று புதிய சீமெந்து களஞ்சியப்படுத்தும் சைலோக்களும் முழுமையாக இயங்க ஆரம்பித்ததும், டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினலின் கொள்ளளவு மேம்படுத்தல் ஒன்லைனில் இயங்க ஆரம்பிக்கும். டோக்கியோ சீமெந்தின் உள்நாட்டு உற்பத்தித் திறனான 3,000,000 மெட்ரிக் டொன்கள் என்பதற்கு மேலதிகமாக டோக்கியோ சீமெந்தின் மொத்த சீமெந்து இறக்குமதி செயற்பாடுகளை வருடாந்தம் 600,000 மெட்ரிக் டொன்கள் என்பதிலிருந்து 1,000,000 மெட்ரிக் டொன்கள் என்பது வரையில் அதிகரிக்கச் செய்யக்கூடியதாக இருக்கும். மொத்த சீமெந்து செயற்பாடுகளுக்கு அதிகளவு களஞ்சியப்படுத்தல் மற்றும் உள்நாட்டு விநியோகத் திறன் மேம்படுத்தல் என்பவற்றினூடாக சிறந்த உள்நாட்டு பெறுமதி உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டு, உள்நாட்டு பொதியிடல், விநியோகம் மற்றும் சரக்குக் கையாளல் செயற்பாடுகளுக்கு வலுவூட்டப்படும். இதனூடாக இறுதித் தயாரிப்பாக பொதி செய்யப்பட்ட சீமெந்தை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை குறைக்கப்படும்.   விரிவாக்கத்துக்கமைவாக, டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினலைச் சேர்ந்த மொத்த சீமெந்து விநியோக செயற்பாடுகளை 30000 மெட்ரிக் டொன்கள் முதல் 60000 மெட்ரிக் டொன்கள் வரை டிசம்பர் மாதத்தில் அதிகரித்துக் கொள்ள முடிந்தது. சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் உறுதியான தீர்வை வழங்கியிருந்தமைக்கு மேலாக, நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு போதியளவு சீமெந்தை விநியோகிப்பதற்கு இந்த நடவடிக்கை உறுதியளித்திருந்தது.   நாட்டின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், இந்தத் தூர நோக்குடைய திட்டமானது, உள்நாட்டின் நிர்மாணத் துறையில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு நிறுவனத்தின் தயார் நிலையை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. மேலும் தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டலையும் நிறுவனம் அண்மையில் மேற்கொண்டிருந்தது. அதனூடாக, மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்தை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். உள்நாட்டு பெறுமதி சேர்ப்பினூடான, எமது உள்நாட்டு பொருளாதாரத்துக்கு வளமூட்டும் இந்த ஒன்றிணைக்கப்பட்ட முயற்சிகளினூடாக தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளின் முன்னணி பங்காளராக டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.   புகைப்படம் :  டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ மற்றும் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த ஆகியோருடன் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினலில் காணப்படுகின்றனர்.