டோக்கியோ சீமெந்து பூநகரியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு தூய குடிநீர் வசதியை நன்கொடையாக வழங்கியது

டோக்கியோ சீமெந்து பூநகரியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு தூய குடிநீர் வசதியை நன்கொடையாக வழங்கியது

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியில் அமைந்துள்ள மூன்று கிராமங்களுக்கு தூய குடிநீர் வசதியை டோக்கியோ சீமெந்து குழுமம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. Re-Awakening Lanka உடன் இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னாவெளி கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த வெரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய கிராமங்களின் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வதிவாளர்கள் இந்தத் திட்டத்தினூடாக தூய குடிநீருக்கான வசதியை பெற்றுக் கொண்டனர். பூநகரி பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



நீர் தூய்மைப்படுத்தல் தீர்வுகளை நிறுவுவதில் டோக்கியோ சீமெந்து அணியின் செயற்பாடுகளை டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் வலு மற்றும் சக்தி செயற்பாடுகளின் பொது முகாமையாளரும், பணிப்பாளருமான ஈ.குகபிரிய வழிநடத்தியிருந்தார். இதில், ஏற்கனவே காணப்படும் மூன்று கிணறுகளை மறுசீரமைப்புச் செய்வது மற்றும் நீரை சேகரித்து வைப்பதற்கு நீர் பம்பிகளையும் தாங்கிகளையும் நிறுவுவது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரதேசத்தின் நீரின் தன்மை தொடர்பான ஆய்வை முன்னெடுத்திருந்ததன் பின்னர், சென்.அந்தனீஸ் ஹைட்ரோ பிரிவினால் நீர் தூய்மையாக்கல் தீர்வு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. நிலக்கீழ் நீரின் தரம் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீட்டின் பிரகாரம், Reverse Osmosis தொழில்நுட்பத்துடனான மூன்று Pure Hydro® நீர் தூய்மையாக்கல் தீர்வுகள் நிறுவப்பட்டிருந்தன. இந்த மனிதநேய திட்டத்தின் அங்கமாக, இந்த கட்டமைப்புகள் நிறுவப்பட்டு முதல் மூன்று வருட காலப்பகுதிக்கு, இந்த தூய்மையாக்கல் பகுதிகளின் பராமரிப்பு மற்றும் பேணல் தொடர்பான நடவடிக்கைகளை சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து டோக்கியோ சீமெந்து முன்னெடுக்கும். வெரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவிய அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.



Re-Awakening Lanka கிராமிய அபிவிருத்தித் திட்டமான Appé Lanka உடன் இணைந்து டோக்கியோ சீமெந்து குழுமம் இந்தத் திட்டத்துக்கு அனுசரணை வழங்கியிருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தும் சமூக மேம்படுத்தல் மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல ஆண்டு காலமாக இந்தப் பகுதியில் பணியாற்றிய அனுபவத்தினூடாக, நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை நிறுவுவதற்கு இந்த மூன்று கிராமங்களை இனங்காண்பதற்கு இந்த அமைப்பு உதவிகளை வழங்கியிருந்தது. பூநகரி பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் Re-Awakening Lanka/Appé Lanka ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திருமதி. ஷானா கொரிஆ கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது திட்டத்தின் முதல் கட்டத்தில், பூநகரி பிரிவைச் சேர்ந்த 21 பாடசாலைகளுக்கு 18 மாத காலப்பகுதியினுள் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பலர் பங்களிப்பு வழங்கியிருந்தனர். பூநகரி போன்ற கிராமத்துக்கு எம்மாலான இயன்ற உதவிகளை வழங்க வேண்டியுள்ளது. இன்று திட்டத்தின் இரண்டாம் பிரிவுக்காக, எம்முடன் டோக்கியோ சீமெந்து நிறுவனமும் கைகோர்த்துள்ளது. இதனூடாக பூநாவெளி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.’ என்றார்.



வெரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய கிராமங்களில் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2000 க்கும் அதிகமான நபர்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாக கடற்றொழில் மற்றும் பண்ணைச் செய்கை அமைந்துள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படும் கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு, சமையல் மற்றும் துப்புரவாக்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரட்சியான காலப்பகுதியில் இந்தத் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கரையோரப்பகுதியில் நிலக்கீழ் நீரின் கடினத்தன்மை மற்றும் உவர்ப்புத் தன்மை காரணமாக, கிராமத்தாருக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. இதன் காரணமாக குடிநீரை கொள்வனவு செய்வது தமது தினசரி வருமானத்தில் பெருமளவு தொகையை ஒதுக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. மழைக்காலங்களில், நீர் காவிச் செல்லும் வண்டிகளுக்கு கிராமங்களை சென்றடைய முடியாத நிலை காணப்படுகின்றது. பிளாஸ்ரிக் கொள்கலன்களில் மழை நீரை சேநகரித்து தமது நாளாந்த தேவைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தக் கிராமங்களில், சிறுவர்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொள்ளும் வசதியை அவதானிக்க முடிந்ததுடன், தமது வீடுகளுக்கு திரும்பும் போது, ஒரு போத்தல் தூய குடிநீரை கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிந்தது. நீரின் கடினத்தன்மை மற்றும் உவர் தன்மை போன்றவற்றின் காரணமாக சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறுநீரக நோய் மற்றும் இதர சிக்கல்கள் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. பிரதேச செயலகம் மற்றும் மாகாண சபை ஊடாக இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு பெருமளவு உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக குடிநீர் பவுசர்களில் கிராமங்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

டோக்கியோ சீமெந்து கம்பனி லங்கா பிஎல்சி கூட்டாண்மை நிலைபேறாண்மை முகாமையாளர் சாலிந்த கந்தபொல கருத்துத் தெரிவிக்கையில், ‘நீர் என்பது மனிதன் அடிப்படைத் தேவையாக அமைந்துள்ளது. எமது நாட்டின் பல பகுதிகளில் சிறந்த தரத்திலான குடிநீர் காணப்படுகின்றது. எவ்வாறாயினும், தமது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்குக்கூட நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் ஆயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர். தூய நீருக்கு தட்டுப்பாடு காணப்படுவதால், சிறுநீரக பிரச்சனை போன்ற நீருடன் தொடர்புடைய நோய்களுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர். இந்த பிரச்சனையை இனங்கண்டு, Appé Lanka எம்மை அணுகி பூநகரி பகுதியில் மூன்று கிராமங்களுக்கு தூய்மையான குடிநீர் விநியோக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கோரியிருந்த நிலையில், நாம் மகிழ்ச்சியுடன் கைகோர்த்தோம். எமது துணை நிறுவனமான சென். அந்தனீஸ் ஹைட்ரோ பிரிவு எமக்கு நீர் தூய்மையாக்கல் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருந்தது. அதனூடாக இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது. பூநகரி பகுதி மக்களுக்கு தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் திருப்தியடைகின்றோம்.’ என்றார்.



கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியைச் சேர்ந்த மக்களுகு;கு தூய குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை என்பது, டோக்கியோ சீமெந்து குழுமம் சமீபத்தில் முன்னெடுத்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக அமைந்துள்ளது. நாட்டின் பொது மக்களுக்கு பெருமளவு பயனளிக்கும் வலுவூட்டல் திட்டங்களை முன்னெடுத்துள்ள முன்னணி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டோக்கியோ சீமெந்து திகழ்கின்றது. இது போன்ற திட்டங்களினூடாக, சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூக நலன்புரி மற்றும் சூழல்பாதுகாப்பு போன்றவற்றை வெற்றிகரமாக ஒன்றிணைத்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்கும் முன்னணி பங்காளராக திகழ்வது எனும் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலித்துள்ளது.