அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட வரிக் குறைப்பின் அனுகூலத்தை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முன்வந்துள்ளதாக டோக்கியோ சீமெந்து குழுமம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால் பெறுமதி சேர் வரியை (VAT) 15% இலிருந்து 8% ஆக குறைக்கவும், தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) 2 சதவீதத்தை முழுமையாக நீக்கவும் தீர்மானித்ததை தொடர்ந்து, இலங்கையின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் மற்றும் விநியோகத்தரான டோக்கியோ சீமெந்து குழுமம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
டோக்கியோ சீமெந்தினால் உற்பத்தி செய்யப்படும் சகல சீமெந்து வர்த்தக நாம தயாரிப்புகளுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பை மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சேமிப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தேசத்தின் புகழ்பெற்ற சீமெந்து நாமங்களான டோக்கியோ சுப்பர் மற்றும் நிபொன் சீமெந்து ஆகியன உள்நாட்டு சீமெந்து சந்தையில் பெருமளவு பங்கை தம்வசம் கொண்டுள்ளன. பிரிதொரு சீமெந்து நாமமான NIPPON CEMENT PRO உள்நாட்டில் வானுயர்ந்த கட்டிடங்களையும் பாரியளவிலான நிர்மாணங்களுக்கும் உயர் வலிமையை சேர்க்கக்கூடிய கொங்கிறீற் கலவையை வழங்கக்கூடிய ஒரே சீமெந்தாக அமைந்துள்ளது.
டிசம்பர் 1ஆம் திகதி முதல் வரி விதிப்பு முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டின் நிர்மாணத்துறைக்கு இது பெரும் அனுகூலத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்திருக்கும். தனிநபர் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக ரீதியான நிர்மாண செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் இந்த வரிக்குறைப்பு பெரும் சகாயமாதாக அமைந்திருக்கும் என்பதுடன், நிர்மாணத்துறையை துரித கதியில் வளர்ச்சியடைச் செய்து, முழுத் துறைக்கும் அனுகூலத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
இலங்கையின் நிர்மாணத்துறையில் நன்மதிப்பைப் பெற்ற சீமெந்து நாமமாக டோக்கியோ சீமெந்து திகழ்வதுடன், உயர் தரம் வாய்ந்த சீமெந்து மற்றும் கொங்கிறீற் விநியோகத்தில் நம்பிக்கை வாய்ந்த உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது. தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் நிறுவனம் முக்கிய அங்கத்தை வகிப்பதுடன், இலங்கையின் சீமெந்து மற்றும் கொங்கிறீற் தயாரிப்புகள் உற்பத்தியில் ஒப்பற்ற முன்னோடியாகவும் திகழ்கின்றது.