The Music Project க்கான தமது அனுசரணையை இரண்டாவது ஆண்டாகவும் வழங்க டோக்கியோ சீமெந்து குழுமம் முன்வந்துள்ளது. The Music Project என்பது அரச சார்பற்ற நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை இசை ஊடாக மேம்படுத்துவதற்கு வலுவூட்டும் திட்டமாக இது அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான பங்காண்மை ஊடாக, டோக்கியோ சீமெந்து குழுமம் முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கும், மாவத்தகம, ஸ்ரீ குணாநந்த கனிஷ்ட வித்தியாலயத்தின் 65 மாணவர்களுக்கும் இசையை பயில்வதற்கு அனுசரணை வழங்குகிறது. இந்தத் திட்டத்தினூடாக, தமக்கு பிடித்த இசைக்கருவியை இவர்கள் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களில் இவர்களும் அடங்கியுள்ளனர். நாடு முழுவதிலும் வௌ;வேறு பகுதிகளில் அழைப்பின் அடிப்படையில் இசைக் கச்சேரிகளை முன்னெடுக்கும் Music Project Orchestra கச்சேரியில் இவர்கள் பங்கேற்பார்கள்.
பாளிநகரில் முன்னெடுக்கப்பட்ட orchestra நிகழ்வில் 110 சிறுவர்கள், பாடசாலை நேரத்தை தொடர்ந்து இசை பயில்வதற்காக ஆர்வத்துடன் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக ஈடுபடக்கூடிய ஒரே மேலதிக செயற்பாடாக இது அமைந்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று, தமது பிள்ளைகள் இசைக்கருவிகளை பயில்வதை கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். இதுபோன்ற அனுபவத்தை குருநாகலிலும் அவதானிக்க முடிந்தது. மர நிழலில், பாய்களில் மாணவர்கள் தமது ஆசிரியர்களுடன் அமர்ந்து, இசையை பயில்வதுடன், இந்த முறையினூடாக மாணவர்களுக்கு இலகுவாகவும், துரிதமாகவும் இசையை பயில்வதற்கு முடியும்.
முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் இசை பாடத்தில் ஈடுபடுகின்றனர்.
பங்குபற்றுநர்கள் வயலின், வியோலா, செலோ, ட்ரம்பட், ஃபிரெஞ்ச் ஹோர்ன் மற்றும் வௌ;வேறு வகையான சாதனங்களை முழுநேர ஆசிரியர்கள் மற்றும் விஜயம் செய்யும் தன்னார்வ செயற்பாட்டாளர்களிடமிருந்து பயில்கின்றனர். மாணவர்கள் இசையை மட்டும் பயிலாமல், ஒன்றிணைவு, ஏனையவர்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் சுய ஆளுமை போன்ற திறன்களையும் பயில்கின்றனர். சிறுவர்கள் மத்தியில் ஒன்றிணைவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பின்தங்கிய இரு விவசாய சமூகங்களை இசையினூடாக ஒன்றிணைத்துள்ளது. இந்த குழு வருடத்தில் இரு தடவைகள் ஒன்றுகூடி, வதிவிட நிகழ்ச்சியை முன்னெடுத்து பகிரப்பட்ட இசையால் ஒன்றிணைக்கப்படுகிறது.
மாவத்தகம, ஸ்ரீ குணாநந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த இசை பாடத்தில் பங்கேற்ற மாணவர்களை காணலாம்.
2011ஆம் ஆண்டில் வடக்கிலும், தெற்கிலும் இந்தத் திட்டம் இயங்க ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில், பாடசாலைகளில் வளங்களை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியிருந்ததுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை செவிமடுப்பதாக அமைந்திருந்தது. அம்பாறை, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இந்தத் திட்டம் பயிற்சிகளை வழங்கியிருந்ததுடன், 3000 க்கும் அதிகமான பதிவு செய்யும் இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் சாதனங்களை விநியோகித்திருந்தது.
தற்போது ஏழாவது ஆண்டாக Music Project முன்னெடுக்கப்படுவதுடன், பிள்ளைகள் தமிழ் மற்றும் சிங்கள இசைகளை பயின்று, ஒன்றிணைந்த இலங்கையில் அங்கம் வகிப்பதையிட்டு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் orchestra அங்கமாக பயணிப்பதனூடாக அவர்களுக்கு வௌ;வேறு கலாசாரங்களை பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், பொதுப் பரீட்சைகளிலும், பிரத்தியேக திறன்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆர்வலர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன. டோக்கியோ சீமெந்து கம்பனி இந்த ஆண்டில் அனுசரணையாளராக இணைந்துள்ளது. நாளைய தலைவர்களுக்கான உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்துவது எனும் நிறுவனத்தின் நம்பிக்கையின் பிரகாரம், புதிய சாதனங்களை பயன்படுத்தி உலகை வெல்ல வாய்ப்பை வழங்க டோக்கியோ சீமெந்து முன்வந்துள்ளது.
சமூக நலன் மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை தனது நிறுவனத்தின் உள்ளக அங்கமாக கொண்டுள்ள டோக்கியோ சீமெந்து நிறுவனம், நாட்டை வளமூட்டும் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது. இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயற்பாடுகளில் டோக்கியோ சீமெந்து பாடசாலைகளுக்கிடையிலான Super Quiz, தம்புளையில் அமைந்துள்ள ஏவைஎஸ் ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகம் மற்றும் Foundation of Goodness அமைப்புடனான பங்காண்மை ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. மேலும், பவளப்பாறைகள் மறுசீரமைப்பு மற்றும் கண்டல் காடுகளை வளர்த்தல் போன்றவற்றை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
படங்கள்:
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், The Music Project காப்பாளர் ஷலினி விக்ரமசூரிய ஆகியோர் அனுசரணைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.