தொடர்ச்சியான 4ஆவது ஆண்டாக கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க Foundation of Goodness க்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை

தொடர்ச்சியான 4ஆவது ஆண்டாக கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க Foundation of Goodness க்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்கு டோக்கியோ சீமெந்து குழுமம் தமது பங்காண்மையை மேம்படுத்தும் வகையில், 2018ஆம் ஆண்டிலும் Foundation of Goodness க்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்த இரு அமைப்புகளுக்குமிடையில் தொடர்ச்சியான 4வது ஆண்டாக இந்த அனுசரணை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தெற்கு மற்றும் வட பிராந்தியங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் கிரிக்கெட் திறமையை வெளிக்கொணரும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

ஹிக்கடுவ மற்றும் சீனிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 2014 இல் ஆரம்பமாகியிருந்த பங்காண்மை, Foundation of Goodness இன் கள இருப்பிடமாக அமைந்துள்ளது. பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு விசேட பயிற்சிகளை பெற்றுக் கொடுக்க ஏதுவாக அமைந்துள்ளது.

Foundation of Goodness இன் பணிப்பாளர் அனுர டி சில்வா இந்த கிரிக்கெட் அக்கடமிக்கு தலைமைத்துவம் வழங்குவதுடன், புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை முன்னெடுக்கின்றனர். இந்த பயிற்சி நிகழ்வுகள் ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல MCC லோர்ட்ஸ் மற்றும் சீனிகம ஸ்ரீ விமல புத்தி சரே ஓவல் ஆகிய இரு சர்வதேச மட்ட கிரிக்கெட் மைதானங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஆதரவுடன் Foundation of Goodness நிர்வகித்து வருகிறது.



மாதாந்த பயிற்சிகள் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரியவின் பங்களிப்புடன் இடம்பெறுவதுடன், ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சியினூடாக 15 பிராந்திய பாடசாலைகளைச் சேர்ந்த 600 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தெற்கு பிராந்தியத்தின் 40 பாடசாலை கிரிக்கெட் வீரர்களை உள்வாங்கி, அவர்களை தேசிய மட்டத்துக்கு தயார்ப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் 11 இளம் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் காணப்படுகின்றனர். 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 12 பேரும், 17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 17 பேரும் அடங்கியுள்ளனர். இவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வதற்காக பயிற்றுவிக்கப்படுவார்கள். டோக்கியோ சீமெந்து குழுமம் மற்றும் கலாசாலையினால் உடற்தகைமை பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்படும்.



தென் பிராந்தியத்தில் கிரிக்கெட் முகாம் வெற்றியளித்திருந்ததை தொடர்ந்து, 2017 ஆகஸ்ட் மாதம், வட பிராந்தியத்துக்கும் அந்த முகாம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளை உள்வாங்கி இந்த முகாம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களை சென்றடைந்திருந்து. ஹேமந்த தேவப்பிரிய மற்றும் அவரின் அணியினர் வட பிராந்தியத்தின் 50க்கும் அதிகமான இளைஞர்களை தயார்ப்படுத்த முன்வந்துள்ளமை விசேட அம்சமாகும்.

இரு நிகழ்ச்சிகளும் பாடசாலை மட்ட பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாவட்ட மட்ட பயிற்றுவிப்பாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறுவதுடன், இவர்கள் இனங்காணப்பட்ட பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை இனங்கண்டு, அவர்களுக்கு தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஊக்குவிப்புகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவார்கள். தேவப்பிரிய அவர்களின் நிபுணத்துவம் வாய்ந்த கண்காணிப்பின் கீழ் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை மற்றும் மாவட்ட மட்ட பயிற்றுவிப்பாளர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டுவார்கள். இந்த செயற்பாட்டினூடாக தற்போது 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் விளையாட்டு வீரர்களை உள்வாங்குவதற்கும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட்டு வீரர்களை உள்வாங்குவதற்கும் வழிகோலியுள்ளது.

இந்த பங்காண்மையினூடாக, முரளி ஹார்மனி கிண்ண போட்டிகளின் இணை அனுசரணையாளராக டோக்கியோ சீமெந்து திகழ்கிறது. முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் சிந்தனை வெளிப்பாடாக அமைந்துள்ள இந்த போட்டியில் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 24 பாடசாலைகளின் 400 போட்டியாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். ரி-20 அடிப்படையிலான போட்டியில் அவர்கள் தமது உண்மையான விளையாட்டு மனப்பாங்கை வெளிக்காட்ட பழகிக் கொள்கின்றனர். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 30 கொங்கிறீற் கிரிக்கெட் ஆடுகளங்களை அமைக்கும் முரளிதரனின் செயற்திட்டத்துக்கும் டோக்கியோ சீமெந்து தனது உதவிக்கரத்தை நீட்டியிருந்தது. இதனூடாக குறைந்த வசதிகள் படைத்த மாணவர்களுக்கு தமது கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்குவதாக அமைந்திருந்தது.



சமூகங்கள், இனங்கள் மற்றும் புவியியல் ரீதியில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில், கிரிக்கெட் விளையாட்டு பெருமளவு பங்களிப்பு வழங்குவதாக டோக்கியோ சீமெந்து உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் வௌ;வேறு பாகங்களையும் சேர்ந்த இளைஞர்களை கிரிக்கெட் விளையாட்டினூடாக இணைவதற்கான வாய்ப்பை வழங்குவதனூடாக, சகோதரத்துவத்தை ஊக்குவிப்பது, புரிந்துணர்வு மற்றும் மதிப்பு ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள நிறுவனம் அடித்தளமிட்டுள்ளது. இது டோக்கியோ சீமெந்தின் பிரதான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளதுடன், துறையில் உண்மையான முன்னோடியாக திகழச் செய்துள்ளது.

Foundation of Goodness என்பது பிரத்தியேகமான பின்தங்கிய பகுதிகளை கட்டியெழுப்பும் மாதிரியாக அமைந்துள்ளதுடன், தற்போது மாதாந்தம் நாடு முழுவதையும் சேர்ந்த 200க்கும் அதிகமான கிராமங்களின் 15,000க்கும் அதிகமான அனுகூலம் பெறுவோரை இலவசமாக சென்றடைகிறது. தனது 30 வலுவூட்டும் செயற்பாடுகள் பிரிவுகள் மற்றும் 9 கிராமிய இருதயதுடிப்பு வலுவூட்டும் நிலையங்கள் மற்றும் சீனிகம பகுதியில் அமைந்துள்ள செயற்திட்ட தலைமையகத்தினூடாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

படம்: Foundation of Goodness இன் ஸ்தாபகரும், பிரதம காப்பாளருமான குஷில் குணசேகர, அனுசரணை காசோலையை டோக்கியோ சீமெந்து கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.