டோக்கியோ சீமெந்து மற்றும் பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் இணைந்து வடமாகாணத்தில் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் முன்னெடுப்பு

டோக்கியோ சீமெந்து மற்றும் பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் இணைந்து வடமாகாணத்தில் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் முன்னெடுப்பு

எமது நாட்டை ஒன்றிணைக்கும் விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் எவ்வாறு ஒன்றிணைந்து கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வத்தை காண்பிக்கின்றனர் என்பதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. வீதிகளில் ஆடியவண்ணம், தமது அணியினருக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். ஒரு கொடியின் கீழ், ஒரு அணிக்காக இவர்கள் ஒன்றுதிரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். மீண்டும் அந்த சிறந்த பொழுதுக்காக எமது முழு நாடுமே எதிர்பார்த்துள்ள ஒரு நிலையில் நாம் காணப்படுகிறோம்.

எமது கிரிக்கெட் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில், தேசம் எனும் வகையில் புதிய திறமைகளை இனங்கண்டு, அவற்றுக்கு வாய்ப்பளிப்பதனூடாக புதிய திறமையாளர்களை விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறான நடவடிக்கைகளினூடாக, எமது தேசத்தை உலக தேசப்படத்தில் உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்லக்கூடிய எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.

நாட்டின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் இந்த திறமைசாலிகளை இனங்காணும் நடவடிக்கைகளை டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுத்த வண்ணமுள்ளது. நிறுவனம், பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் உடன் இணைந்து மாதாந்த கிரிக்கெட் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது. இதன் போது இளைஞர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, கிரிக்கெட் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளை பெற்று, தமது திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பும் வழங்கப்படுகிறது. தென் பகுதியில் சீனிகம மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் அவசியமான பயிற்சி உட்கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டதுடன், ஆரம்பிக்கப்பட்ட இந்தத்திட்டம், பின்தங்கிய நிலையில் காணப்படும் கிரிக்கெட் வீரர்களை, தமது திறமைகளை வெளிக்கொண்டுவந்து, பிரகாசமான எதிர்கால விளையாட்டு தொழில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிப்பதாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நடைபெற்ற அறிமுக கிரிக்கெட் பயிற்சி முகாமில், புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான ஹேமந்த தேவப்பிரிய மற்றும் அவரின் நிபுணர் அணியினரை காணலாம்.

இந்தப்பயணத்தில் மற்றுமொரு முக்கிய படியை பூர்த்தி செய்து, டோக்கியோ சீமெந்து மற்றும் பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் இணைந்து, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கிரிக்கெட் பயிற்சி முகாம்களை முன்னெடுத்திருந்தன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் முதற்கட்ட முகாம் ஆகஸ்ட் 26ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹேமந்த தேவப்பிரிய மற்றும் அவரின் நிபுணர் அணியினால் இந்த முகாம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் 13 – 19 வயதுக்குட்பட்ட 35 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். பங்குபற்றுநர்களின் திறமைகள் வெளிப்படுத்தலானது, அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்வதாக அமைந்திருந்தது. எதிர்காலத்தில் புதிய கிரிக்கெட் நட்சத்திரங்களை தேசிய மட்டத்தில் காணும் எதிர்பார்ப்புடன் பயிற்றுவிப்பாளர்கள் தமது பயிற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.



யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான ஹேமந்த தேவப்பிரிய பயிற்சிகளை முன்னெடுக்கிறார்.



டோக்கியோ சீமெந்து, வட மாகாணத்தில் முன்னெடுத்திருந்த பயிற்சி முகாம்களை, கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் முன்னெடுத்திருந்தது. பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் விளையாட்டு பணிப்பாளர் அனுர டி சில்வா தலைமையில் இந்த பயிற்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வட பிராந்தியத்தைச் சேர்ந்த 50 இளைஞர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை பெற்றுக்கொடுத்து, தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களாக உருவாக்குவது இவரின் நோக்கமாக அமைந்துள்ளது. பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் ஸ்தாபகரும் பிரதம காப்பாளருமான குஷில் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது நாட்டில் பெருமளவு திறமையானவர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் அதிகளவு திறமையானவர்கள் காணப்படுகின்றனர். இவர்களை முறையாக தயார்ப்படுத்துவதனூடாக, தேசத்துக்கு உகந்த வீரர்களை தயார்ப்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும்’ என்றார்.



இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு எப்போதும் டோக்கியோ சீமெந்து தனது ஆதரவை வழங்கி வந்துள்ளது. டோக்கியோ சீமெந்து அனுசரணையில் பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் பயிற்சி முகாம்கள் மூலமாக இதுவரையில் தென் பகுதியைச் சேர்ந்த 600க்கும் அதிகமான பாடசாலை வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். தேசிய மட்டத்தில் 19 வயதுக்குட்பட்ட அணியில் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் உள்ளடங்கியிருந்தனர். தேசிய மட்டத்திலும் ஒரு வீரர் விளையாடியுள்ளார். முத்தையா முரளிதரனின் முயற்சியான வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் 30 கொங்கிறீற் விளையாட்டு திடல்களை தயாரிப்பது எனும் நோக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு வழங்கி வருகிறது. நாட்டின் தென் பகுதிக்கு வட பகுதிக்குமிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் உறுதியான செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்த வண்ணமுள்ளது. முரளி ஹார்மனி கிண்ண போட்டிகளுடன் நிறுவனம் எப்போதும் கைகோர்த்துள்ளதுடன், 24 பாடசாலைகளிலிருந்து 400 கிரிக்கெட் வீரர்களை தயார்ப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு T20 போட்டிகளில் பங்கேற்ற வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் டோக்கியோ சீமெந்து அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் சகல பாகங்களிலும் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்திக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. கிரிக்கெட் விளையாட்டினூடாக நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து. விளையாட்டுக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தேசத்தை கட்டியெழுப்புவதிலும் பங்களிப்பு வழங்குவதுடன், துறையின் முன்னோடி எனும் வகையில், டோக்கியோ சீமெந்தின் பிரதான அர்ப்பணிப்பாக இது அமைந்துள்ளது.