தென் பிராந்தியத்தில் காணப்படும் பவளப்பாறைகளை பாதுகாக்கும் திட்டத்தில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்துடன் Foundation of Goodness கைகோர்ப்பு

தென் பிராந்தியத்தில் காணப்படும் பவளப்பாறைகளை பாதுகாக்கும் திட்டத்தில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்துடன் Foundation of Goodness கைகோர்ப்பு

தென் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளை பாதுகாக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கும் செயற்திட்டத்தில் பங்காளராக இணைந்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் Foundation of Goodness (FoG) அமைப்பு கைச்சாத்திட்டிருந்தது. டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness (FOG) ஆகியவற்றுக்கிடையிலான நீண்ட கால ஒன்றிணைவினூடாக, இலாபநோக்கற்ற அமைப்பு தமது சுழியோடல் மற்றும் பயிற்சி பிரிவான ‘டைவ் லங்கா, டைச் சீனிகம’ ஊடாக, சீனிகம மற்றும் ஹிக்கடுவ கரையோரப் பகுதிகளில் காணப்படும் உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, இலங்கை கடற்படை, வனஜீவராசிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு நிதியம் (WRCT) மற்றும் கடல் வளங்கள் நிதியம் (BRT) ஆகியவற்றுடன் Foundation of Goodness கைகோர்த்து டோக்கியோ சீமெந்தினால் முன்னெடுக்கப்படும் பவளப்பாறை பாதுகாப்பு திட்டத்துக்கு பிரதான பங்களிப்பு வழங்கவுள்ளது.



புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் Foundation of Goodness அமைப்பின் ஸ்தாபகரும் பிரதம காப்பாளருமான குஷில் குணசேகர ஆகியோருடன், இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் காணப்படுகின்றனர்.

டோக்கியோ சீமெந்து நிறுவனம் சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் மேலாக, தமது பிரதான சூழல்சார் நிலைபேறாண்மை நடவடிக்கைகளில் ஒன்றாக பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. இலங்கையின் கரையோரப்பகுதிகளில் காணப்படும் பெருமளவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பவளப்பாறை படிமத்தை பாதுகாத்து மீளமைப்பது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய பங்காளர்களுடன் நிறுவனம் கைகோர்த்துள்ளது. பவளப்பாறைகள் அழிவடைவதை தவிர்ப்பதற்காக இந்த சூழல்சார் அக்கறை கொண்ட நிறுவனங்கள் தமது நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

பவளப் பாறைகளை மீள வளர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் போன்றவற்றை பல்கலைக்கழக மாணவக் குழுக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வ செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த அணி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. இது தொடர்பான ஆய்வுகளுக்கு டோக்கியோ சீமெந்து நிதி வழங்கலை மேற்கொள்வதுடன், நீரினுள் காணப்படும் பவளப்பாறைகளின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கு அவசியமான விஞ்ஞான தொழில்நுட்ப சாதனங்களை விநியோகிப்பதுடன், தேவையான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளது. நீண்ட கால பாதுகாப்பு நடவடிக்கைகளில் பவளப்பாறைகளின் உருவாக்கம் மற்றும் அவற்றின் வளர்ச்சி தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்வதை இலக்காகவும் கொண்டு இந்த திட்டம் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



கடல் வளங்கள் மற்றும் வனவிலங்குகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு நம்பிக்கை நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவு பகிர்வு நிகழ்வில் டைவ் சீனிகமவைச் சேர்ந்த FoG நீர்சுழியோடிகளை காணலாம்.

பெருமளவு சேதமடைந்துள்ள பவளப்பாறைகள் காணப்படும் பகுதிகளில், மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட கொங்கிறீற் மாதிரிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பவளப் பந்துகள் போன்ற கட்டமைப்பை நிறுவுகின்றது. இந்த பவளப் பந்துகள், புதிய பவளப் பாறைகள் வளர்ச்சியடைவதற்கான ஆதாரமாக செயற்படுகின்றன. மீன் இனப்பெருக்கம் இடம்பெற்று, காலப்போக்கில் இயற்கையான கடல் ஜீவராசி சஞ்சாரமாக மாற்றமடையும். திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்பிட்டி மற்றும் காலி போன்ற கரையோர பகுதிகளில் இந்த பவள பந்துகளை நிறுவுவதில் இலங்கை கடற்படை முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. குறிப்பிட்ட பகுதிகள் BRT மற்றும் WRCT போன்ற விஞ்ஞான பங்காளர்களால் கவனமான முறையில் இனங்காணப்பட்டு தெரிவு செய்யப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் அவற்றை நிறுவும் வரையில், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் புதிய பவள தேக்கமொன்றை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் பவள வளர்ப்பகங்கள் காணப்படுகின்றன.

தற்போது முதல், டைவ் சீனிகம, டைவ் லங்கா இந்த திட்டத்துடன் இணைந்து, பவள பந்து நிறுவுதல் மற்றும் பவளப் பாறை வளர்ப்பு தொடர்பான உள்நாட்டு சுழியோடல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளன. ஆய்வு மற்றும் பவள வளர்ப்பு நிகழ்ச்சி, BRT மற்றும் WRCT ஆகியவற்றைச் சேர்ந்த கடல்வாழ் உயிரியல் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும். FoG சுழியோடிகளுக்கு பவளப் பாறைகள் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர், இந்த திட்டம் விஸ்தரிக்கப்படும் என்பதுடன், இலங்கையின் தென் பிராந்திய கரையோரங்களில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பவளப் பாறைகளை பாதுகாக்கும் திட்டத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும்.

FoG டைவ் லங்கா சுழியோடல் மற்றும் பயிற்சி நிலையம் 2008 ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன் நோக்கம், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த சுழியோடல் பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதாகும். சீனிகம மற்றும் ஹிக்கடுவ கரையோரப் பகுதிகளுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவு கவரும் வகையில் இந்த பவளப் பாறைகள் அமைந்துள்ளன. சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில், சீனிகம பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பவளப் பாறைகளை பாதுகாப்பதில் அதிகளவு அக்கறை செலுத்தியிருந்தனர். ஏனெனில், அவர்களின் உயிர் காப்பதற்கு அவை உதவியிருந்ததுடன், தற்போது வாழ்வாதாரத்துக்கும் உதவியாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தினூடாக டைவ் சீனிகம, டைவ் லங்கா இளைஞர்களுக்கு தமது கரையோர பவளப் பாறைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



FoG நீர்சுழியோடிகளுக்கு ஆய்வு பங்காளர்களினால் பவளைப்பாறை மீள் வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Foundation of Goodness உடனான டோக்கியோ சீமெந்தின் கைகோர்ப்பு என்பது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பேணப்படுகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த இரு அமைப்புகளும் இணைந்திருந்தன. Foundation of Goodness என்பது கிராமிய அபிவிருத்தியில் ஈடுபாட்டைக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். சீனிகமவில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள 10 கிராமிய வலுவூட்டல் நிலையங்களினூடாக 30 க்கும் அதிகமான வலுவூட்டல் நிகழ்ச்சிகளை இலவசமாக முன்னெடுக்கிறது. வருடாந்தம் நாடளாவிய ரீதியில் 300க்கும் அதிகமான கிராமங்களின் சுமார் 28,000க்கும் அதிகமான அனுகூலம் பெறுவோர் பயனடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கும் பல்வேறு நிலைபேறாண்மை செயற்பாடுகளில் ஒன்றாக பவளப் பாறைகள் பாதுகாப்பு திட்டம் அமைந்துள்ளது. கண்டல்காடு வளர்ப்பு அடங்கியுள்ளதுடன், பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது. இலங்கை கடற்படைக்கு கிழக்கு கரையோரப் பகுதிகளில் இந்த கண்டல்காடு திட்டத்துக்கான கன்றுகளை பயிரிடுவதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. இது போன்ற செயற்பாடுகளினூடாக நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. தனது கூட்டாண்மை நாமத்தின் கீழ் சமூக நலன்புரி செயற்பாடுகள் மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகள் போன்றவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.