யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 25 குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்தினால் வீடுகள் அன்பளிப்பு

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 25 குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்தினால் வீடுகள் அன்பளிப்பு

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வந்த 25 குடும்பங்களுக்கு நிலாவெளி, அடம்போடை பகுதியில் அமைந்துள்ள தனது சொந்தக்காணியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்வந்திருந்தது. திருகோணமலை பிரதேசத்தில் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த மக்களை மீள தமது சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த மாபெரும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டம் அமைந்திருந்தது.

இந்த வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2017 மே மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஸ்தாபக தலைவரான மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் நினைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் 2009ஆம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து சுனாமி வீடமைப்புத் தொகுதியை அண்மித்ததாக இந்த வீடமைப்புத் திட்டமும் அமைந்துள்ளது. இதன் போது சுனாமியால் பாதிகப்பட்ட 25 குடும்பங்களுக்கு வீடுகள் உறுதிகளுடன் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளை கையளிக்கும் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார, டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் மற்றும் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோருடன் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர். அரசாங்க அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் முகாமில் வசிக்கும் சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மத்தியில் மேற்கொண்டிருந்த மதிப்பீட்டிலிருந்து இந்த வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக குடும்பங்களை தெரிவு செய்திருந்தனர்.

25 குடும்பங்களில் சில குடும்பங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் சாவிகளை கையளித்திருந்தார். 1984ஆம் ஆண்டு இந்தப் பிராந்தியத்தில் முன்னாள் ஜனாதிபதி. ஜே.ஆர். ஜயவர்தன அவர்களால் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட போது, இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஞானம் அவர்களிடம் தாம் கோரிக்கை விடுத்திருந்ததை நினைவுகூர்ந்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நிறுவனம் செயலாற்றி வருகின்றமைக்காக நன்றி தெரிவித்தார். தேசத்தின் நலன் கருதி டோக்கியோ சீமெந்து செயலாற்றுகின்றமையை பாராட்டியிருந்ததுடன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்காகவும் வீடமைப்புத் திட்டங்களை நிறுவியிருந்தமையையும் வரவேற்றிருந்தார்.



டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தொழிற்சாலை பொது முகாமையாளர் ரவீந்திரகுமார் இந்த திட்டத்தை கண்காணித்திருந்ததுடன், சகல ஒழுங்குபடுத்தல் வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார். இந்த புதிய வீடமைப்புத் திட்டம் 10 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு இல்லமும் சுமார் 2.3 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்ததாக அமைந்துள்ளதெனவும் கூறினார். ஒவ்வொரு இல்லமும் 10 பேர்ச் காணியில் அமைந்துள்ளதுடன், சகல அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளன. வீதி கட்டமைப்பு, சமூக நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா போன்றனவும் அமைக்கப்பட்டுள்ளன. நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, சுமார் 100க்கும் அதிகமான மக்களுக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் வீட்டுக்கு அவசியமான தளபாட வசதிகளையும் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. பெருமளவு இடர்களுக்கு முகங்கொடுத்திருந்த இந்த மக்களின் வாழ்க்கையில் சொகுசான நிலையை ஏற்படுத்துவதில் நிறுவனம் பெருமை கொள்வதுடன், தொடர்ந்தும் இந்த பிரதேச மக்களின் வாழ்க்கையில் பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நிறுவனம் கவனம் செலுத்தும் என்றார்.



எமது நாட்டில் இடம்பெயர்ந்த குடிமக்களுக்கு நிலையான வாழ்விடங்களை அமைத்துக் கொடுப்பது மிகவும் பெறுமதியான செயற்பாடாகும். தமது சொந்த காணி எனக்கூறிக் கொள்ளக்கூடிய ஒரு பகுதியில் அவர்களுக்கென ஒரு வீடு நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது. தேசத்துக்கு வளமூட்டுவது என்பதற்கான டோக்கியோ சீமெந்தின் அர்ப்பணிப்பு மற்றும் இதுபோன்ற வாழ்க்கையின் முக்கியமான செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவது போன்ற மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் சிந்தனை எதிர்பார்ப்புகளுக்கமைய அமைந்துள்ளன. நிறுவனம் தனது வியாபாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் சமூக நலன் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பதை வெற்றிகரமாக உள்வாங்கியுள்ளது.

பெருமளவான சமூக-சூழல் சென்றடைவு திட்டங்களினூடாக, நிலைபேறான வியாபார வளர்ச்சியை எய்துவதுடன், தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது ஒவ்வொரு கூட்டாண்மை நிறுவனத்தின் பொறுப்பாக அமைந்துள்ளது என நிறுவனம் கருதுகிறது.